குழந்தை

பாரம்பரிய முறையில் குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி ?

How to bathe a baby

பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டுவது என்பது இன்றைக்கு ஒரு பெரிய விசயம் ஆகிவிட்டது. குழந்தை விசயத்தில் ஒவ்வொரு விசயமும் ஒரு சவாலன காரியமாக இன்று ஆனதற்கு காரணம் தனிக்குடித்தனம். பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் வழிகாட்டுவார்கள். அப்படி இல்லாத தம்பதிகளுக்கு குளிப்பாட்டுவது என்பது சற்று குழப்பமான விசயம்தான். அதற்காக கவலைப்பட வேண்டாம், பல்வேறு வழிகளில் நீங்கள் குழந்தையை குளிப்பாட்டலாம், அதுபற்றித்தான் விரிவாகக் காணப்போகின்றோம்.

முதலில் குழந்தைக்கு தண்ணீர் அறை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். ஏஸி அறையாக இருந்தால், அதை சூடு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். (Heat Mode). இதமான சூட்டில் (90 – 100 F), ஒரு பெரிய பேஸினில் வெந்நீர், அழுத்தமான மென்மையான 2 துண்டுகள், கண்களைத் துடைக்க பஞ்சு உருண்டைகள் அல்லது மென்மையான சிறு துணிகள், குழந்தைக்கு வேண்டிய உடைகள், குளியலுக்குப் பிறகு போர்த்திவிட தலைக்குல்லாயுடன் கூடிய டவல் என எல்லாவற்றையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தையின் உடைகளை கழற்றிவிடக்கூடாது. நன்கு ஒரு அழுத்தமான டவலால் போர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். வைத்திருக்கும் வெந்நீரை உங்களுடைய மணிக்கட்டில் அல்லது உள்ளங்கைப் பகுதியில் ஊற்றிப் பார்க்கவும். லேசான சூடுதான் இருக்க வேண்டும், பஞ்சு உருண்டைகளை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து கண்களின் இமைகளை துடைத்துவிடவேண்டும். மூக்குப் பகுதியில் ஆரம்பித்து காதை நோக்கி சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு தனி பஞ்சு உருண்டை அல்லது மெல்லிய பருத்தித் துணி உபயோகிக்க வேண்டும்.

பிறகு, வேறு ஒரு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து, முதலில் மூக்கைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக, லேசான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, காதின் வெளிப் பகுதியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். காதின் உட்பகுதியில் எதுவும் செய்யக்கூடாது. பிறகு இரு கன்னங்கள், வாய்ப்பகுதி, தாடை, கழுத்து ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இப்போது, குழந்தையின் சட்டையை அவிழ்த்துவிட்டு நெஞ்சு, வயிறு ஆகியவற்றை, வெந்நீரில் நனைத்து பிழிந்த வேறொரு சுத்தமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

தொப்புள் காயவில்லையென்றால், மிகவும் கவனமாக அந்தப் பகுதியை ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஈரம் பட்டுவிட்டால், உடனடியாக நன்கு உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண்டும். தொப்புள் அருகிலிருந்து துடைக்க ஆரம்பித்து வெளிப்புறமாகத் தொடர வேண்டும். பிறகு, கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கைகளின் அக்குள் மற்றும் கைகளின் மடிப்புகளை கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும். அங்கு கிருமித் தொற்றும் பூசணத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

செய்யக்கூடாதவை

குழந்தைக்கு பால் கொடுத்த உடனேயே குளிக்க வைக்கக்கூடாது. காது, மூக்கு கண்களில் எண்ணெய் போன்றவற்றை ஊற்றக்கூடாது. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஊதக்கூடாது. தொண்டையிலிருந்து கையை உள்ளேவிட்டு சளியை எடுக்கக்கூடாது. தலையில் எண்ணெய் தடவி, கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை தேய்த்துக் குளிக்க வைக்கக்கூடாது. சாம்பிராணி போடக்கூடாது. பவுடர் போடக்கூடாது. கண்களில் மை தடவக்கூடாது. புருவத்தில் மை தடவக்கூடாது நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பதைக்கூட தவிர்ப்பது நல்லது.

முக்கிய குறிப்புகள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி உதிர்ந்த பிறகுதான், பேசின் குளியல் செய்யலாம். குழந்தையின் தலையைச் சுத்தம் செய்வதும் அப்புறம்தான். பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைகுளிக்க வைக்கலாம். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று குளிக்கவைக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தோலின் PH (அமிலத்தன்மை) முதலில் 6.3 ஆக இருந்து பிறகு 4 நாட்களில் அது 4.5 ஆக குறைகிறது. அதாவது, ஒரு அமிலத்தன்மையுடன் தோல் இருப்பதால், இது ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது. இதைப் பாதிக்காத அளவு தோலை சுத்தம் செய்யும் மென்மையான சோப் போன்றவற்றை குழந்தை பிறந்த 4-ம் நாள் முதல் பயன்படுத்தலாம்.

பேசின் குளியல் முறை

பேசினில் முக்கால் அளவு இளம் சூட்டில் உள்ள வெந்நீர் நிரப்பவும். குழந்தையின் கழுத்தையும் தலையையும் தாங்கிப் பிடித்தவாறு, கழுத்துக்குக் கீழ் குழந்தையை பேசினில் இருத்தவும். ஒரு முறை தண்ணீரை மாற்றி, குழந்தையை சுத்தம் செய்யவும். தலையை சிறிது மேல் நோக்கிப் பிடித்து, பின்பக்கம் வழியுமாறு நீரை ஊற்றவும். குழந்தையின் முகத்தில் நீர் வழியாதபடி நம் கையை குழந்தையின் நெற்றியில் தடுப்புபோல் வைத்துக்கொள்ளலாம். தலையை மிருதுவான சோப் அல்லது ஷாம்பு போட்டு சுத்தம் செய்யலாம். இரண்டு நாட்கள் விட்டு, மூன்றாம் நாள் தலையை சுத்தம் செய்யலாம். வெய்யில் கடுமையாக இருக்கும் காலங்களில், குழந்தைக்கு நோய் ஏதும் இல்லையெனில், ஒருநாள் விட்டு ஒருநாள் தலைகுளிக்க வைக்கலாம். பேசினில் குழந்தையின் உடல்பகுதி நனையும்வரை மட்டுமே நீர் இருக்க வேண்டும்.

பாரம்பரிய முறை

குளிக்கவைப்பவர், தரையில் இரண்டு கால்களையும் நன்கு நீட்டி உட்கார வேண்டும். கணுக்கால் அருகில் கால்களின் இடைவெளியில் குழந்தையின் முகம் இருக்குமாறு குப்புறப் படுக்கவைக்க வேண்டும். குழந்தையின் தலையின் பின்பகுதி, கழுத்து, முதுகு, புட்டம் ஆகியவற்றில் நீர் ஊற்றி, சோப் போட்டு சுத்தம் செய்து குளிக்கவைக்கவும். குழந்தையை திருப்பி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுத்தம் செய்யவும். காதுக்குள் நீர் புகாமல், காதுகளின் பின்புறம், கழுத்து மடிப்பு, அக்குள், கைகளை சுத்தம் செய்யவும். இறுதியாக, குழந்தையின் இடுப்பு, பிறப்பு உறுப்பு பகுதி மற்றும் கால்களை சுத்தம் செய்யவும். பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்யும்போது, முக்கியமாக பெண் குழந்தைக்கு முன்புறத்திலிருந்து பின்புறமாகச் செல்ல வேண்டும். குழந்தையை மிருதுவான காட்டன் துண்டினால் துடைத்து உடனே உடைகளை அணிவிக்கலாம். வேகமாக அழுத்தித் துடைப்பதை அல்லது தேய்ப்பதைத் தவிர்க்கவும். காரத்தன்மை கொண்ட சோப் வகைகளை தவிர்க்கவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Source
PhotoPhoto

Related Articles

Back to top button